Saturday, December 1, 2012

பணம் தரும் பணம்


உலகத்தில பல விஷயங்களைப் பத்தி, எது மொதல்ல வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்றாங்களோ இல்லையோ, சினிமாப்பாட்டு எழுதறவங்க இது மாதிரி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க.

"கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா"

மாதிரி!

இந்த ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். நம்ம விஷயத்துக்கு வருவோம்.

பணம் சம்பாதிக்கணும்னா மொதல்ல பணம் வேணும். அப்படின்னா அதுக்கு முன்னால பணம் சம்பாதிக்கணும்! இது எப்படின்னா, நெல் அறுவடை செய்யணும்னா மொதல்ல நெல்லை விதைக்கணுமே அது மாதிரி.

சரி, இந்த விதை நெல்லுக்கு எங்கே போறது? சில பேரு முந்திய வருஷம் வெளைஞ்ச நெல்லிலேருந்து விதை நெல்லுன்னு தனியா எடுத்து வச்சிருப்பாங்க. வேறு சில பேரு, இந்த மதிரி சேர்த்து வச்சிருக்கிறவங்ககிட்டேயிருந்து விதை நெல்லை வெலை கொடுத்து வாங்குவாங்க. ஆனா நெலம் இருக்கிறவங்க யாரும், 'எங்கிட்ட விதை நெல்லு இல்லே. அதனால என்னால நெல் விதைக்க முடியாது. ஆனா எனக்கு நெறைய நெல்லு அறுவடை செய்யணும்'னு சொல்ல மாட்டாங்க.

ஆனா, நீங்க நெறைய பணம் சம்பாதிக்கணும்னா, முதல்ல விதை நெல்லு மாதிரி கொஞ்சம் பணம் வேணும்னு சொன்னா, நெறையபேரு 'எங்கிட்ட பணம் இல்லியே! நான் எப்படிப் பணம் சம்பாதிக்கறது?'ன்னு ரொம்ப புத்திசாலித்தனமா கேப்பாங்க!

பணம் இல்லேன்னா பணம் சம்பாதிங்க! நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தெரியுது. இப்பத்தானே சொன்னீங்க, 'பணம் இருந்தாத்தான் பணம் சம்பாதிக்க முடியும்னு? எங்கிட்டதான் பணம் இல்லையே! நான் எப்படிப் பணம் சம்பாதிக்கறது?'

இதுக்கான பதில் ரொம்ப சிம்பிள். விதை நெல்லு இல்லாதவங்க அதை விலை குடுத்து வாங்கற மாதிரி, ஆரம்பத்தில நீங்களும் கொஞ்சம் பணத்தை வெலை குடுத்து வாங்கணும்!

பணத்தை எப்படி வெலை குடுத்து வாங்கறதுங்கறிங்களா? இங்கே நான் வெலைனு சொன்னது நீங்க செய்ய வேண்டிய ஒரு சின்ன தியாகத்தை. இந்தச் சின்னத் தியாகம் உங்களோட ஒழைப்பா இருக்கலாம். ஏதாவது வேலை செஞ்சு நீங்க கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். அல்லது உங்களோட தேவைகள் எதையாவது குறைச்சுக்கிட்டு, பணத்தை மிச்ச்ப்படுத்தலாம். கொஞ்சம் யோசிச்சு என்ன தியாகம் செய்யப்போறிங்க என்பதைத் தீர்மானிச்சு வையுங்க.

No comments:

Post a Comment