Tuesday, December 4, 2012

வரவு எட்டணா, சேமிப்பு என்னண்ணா?


நம்பள்ள பலபேருக்கு உள்ள பிரச்னை பணப்பற்றாக்குறைதான். அதாவது வரவுக்கு மேலே செலவு இருக்கு. இதிலே எங்கேயிருந்து மிச்சம் புடிக்கிறதுன்னு நீங்க முணுமுணுக்கறது என் காதிலே விழுது.

விஜயவாடா பக்கத்திலே மங்களகிரின்னு ஒரு ஊரு. அங்கே ஒரு மலைக்குகையில நரசிம்மர் கோவில் ஒண்ணு இருக்கு. அவருக்குப் பானக நரசிம்மர்னு பேரு. அவரோட வாயிலே கொஞ்சம் பானகத்தை ஊத்தினா, அது உள்ளே போயிட்டுப் பிரசாதமா கொஞ்சம் மட்டும் விக்கிரகத்தின் வாயிலிருந்து வெளியே வழிஞ்சு வரும். இதில் என்ன அதிசயம்னா, நீங்க ஒரு குடம் பானகத்தை ஊத்தினா அதுல கொஞ்சம் பிரசாதமா வெளியே வரும். ஒரு தம்ளர் பானகம் ஊத்தினாலும் அப்பவும் கொஞ்சம் பிரசாதமா வரும். இது எப்படிங்க? ஒரு குடம்னா, அது நிறைய அளவு. அவ்வளவுக்கும் உள்ளே இடம் இல்லாம கொஞ்சம் வெளியே வரலாம். ஆனா ஒரு தம்ளர்ங்கறது கொஞ்சம்தானே? அது முழுக்க உள்ளே போயிடணும் இல்லே? அதிலேயும் எப்படிங்க மீதி வரும்?

அதுமாதிரிதான். ஐயாயிரம் ரூபாய் சம்பாதிக்கறவங்களுக்கும்  பற்றாக்குறை இருக்கு. அம்பதாயிரம் ரூபா சம்பாதிக்கறவங்களுக்கும் பற்றாக்குறை இருக்கு. ரெண்டு பேருமே எங்களால சேமிக்க முடியலியேன்னு பொலம்பறாங்க.

பானக நரசிம்மர் உதாரணத்தின் மறு பக்கம் இது.

பானக நரசிம்மரிடம் எவ்வளவு குறைவான அளவு பானகத்தைக் கொடுத்தாலும், அதில் ஒரு பகுதியை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்! சேமிப்பும் இதுபோலத்தான். உங்கள் வருமானம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியை உங்களால் சேமிக்க முடியும்.


சேமிப்பு பத்தி ஒரு விதி இருக்கு. ஒவ்வொருத்தரும் தங்களோட வருமானத்தில பத்தில ஒரு பங்காவது சேமிக்கணும். அது சரி. ஐயாயிரம் ரூபா சம்பாதிக்கறவங்களால ஐநூறு ரூபாய் எப்படிச் சேமிக்க முடியும்னு கேக்கலாம். முடியும். எப்படீங்கறீங்களா?

ஐயாயிரம் ரூபாய் மாத வருமானம் உள்ளவருக்கு திடீர்னு ஐநூறு ரூபாய்க்கு மருத்துவச் செலவு வந்துடுச்சுன்னு வச்சுப்போம். அப்ப அந்த மாசம் அவர் செலவு ஐநூறு ரூபாய் கூடிப் போயிடும் இல்லே? அந்த அதிகப்படிச் செலவை அவரு எப்படி ஈடு கட்டுவாரு? உடனடித் தேவைக்காகக் கடன் வாங்கினாலும் கடனைத் திருப்பிக் கொடுத்துத்தானே ஆகணும்? வேறு ஏதோ செலவுகளைக் கொறைச்சுக்கிட்டுத்தானே அந்த ஐநூறு ரூபாயச் சமாளிச்சாகணும்?

சிலபேர் ஏதோ ஒரு பெரிய செலவுக்காக அலுவலகத்தில கடன் வாங்குவாங்க. அந்தக் கடனை மாசாமாசம் அவர் சம்பளத்தில புடிப்பாங்க. மாசம் ஐநூறு ரூபாய் புடிக்கறாங்கன்னு வச்சுப்போம். அதனால அந்தக் கடன் அடையும்வரை அவர் கைக்கு வர சம்பளத்துல மாசா மாசம் ஐநூறு ரூபா கொறைஞ்சுடும் இல்ல? அதனால அந்தக் கடன் முடியும்வரை ஒவ்வோரு மாசமும் அவர் தன்னோட குடும்பச் செலவுல ஐநூறு ரூபாய் கொறைச்சுக்க வேண்டி வரும் இல்ல? அப்படின்னா தேவைப்பட்ட நம்ம செலவுகளைக் கொறைச்சுக்க முடியும்கறதுதானே உண்மை?


ஒங்க மொத்த வருமானம் எவ்வளவு இருந்தாலும், அதுல பத்து சதவீதத்தைச் சேமிப்புக்காக எடுத்து வச்சிட்டு மீதமுள்ள தொகைதான் ஒங்க வருமானம்னு நெனச்சு செலவு பண்ணுங்க. சேமிக்கறதுக்கு இதுதான்  சிறந்த வழி.

சிலபேரு சொல்லுவாங்க: "என்னோட மொத்த வருமானம் ஐயாயிரம் ரூபா. ஆனா கைக்கு வரது ரெண்டாயிரம் ரூபாதான். இதுல ஐநூறு ரூபாயை நான் எப்படிச்  சேமிக்க முடியும்?" இவங்க மொதல்ல கைக்கு வர ரெண்டாயிரம் ரூபாயில பத்து சதவீதத்தை அதாவது இருநூறு ரூபாயைச் சேமிக்கத் துவங்கலாம். ரெண்டாயிரம் ரூபாயே மிகக் கொறைஞ்ச தொகை. அதுல இருநூறு ரூபாய் எப்படிச் சேமிக்க முடியும்னு கேட்டா அதுக்கு பதில் இதுதான்: கைக்கு வரதே ஆயிரத்து எண்ணூறு ரூபாய்தான்னா என்ன பண்ணுவீங்க? அது மாதிரி நெனச்சுக்க வேண்டியதுதான்.

இன்னும் சிலபேர் கேப்பாங்க. "எனக்கு வருமானமே இல்லை. நான் கடன் வாங்கித்தான் வாழ்க்கையை நடத்தறேன்? நான் என்ன செய்யறது?"ன்னு. கடன் வாங்கற தொகையில பத்து சதவீதத்தைச் சேமியுங்க. ஏதோ ஒரு மாசம் கடன் கெடக்கலேன்னா இந்தச் சேமிப்பு உதவும்!


Saturday, December 1, 2012

பணம் தரும் பணம்


உலகத்தில பல விஷயங்களைப் பத்தி, எது மொதல்ல வந்ததுன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பண்றாங்களோ இல்லையோ, சினிமாப்பாட்டு எழுதறவங்க இது மாதிரி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டே இருக்காங்க.

"கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா"

மாதிரி!

இந்த ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். நம்ம விஷயத்துக்கு வருவோம்.

பணம் சம்பாதிக்கணும்னா மொதல்ல பணம் வேணும். அப்படின்னா அதுக்கு முன்னால பணம் சம்பாதிக்கணும்! இது எப்படின்னா, நெல் அறுவடை செய்யணும்னா மொதல்ல நெல்லை விதைக்கணுமே அது மாதிரி.

சரி, இந்த விதை நெல்லுக்கு எங்கே போறது? சில பேரு முந்திய வருஷம் வெளைஞ்ச நெல்லிலேருந்து விதை நெல்லுன்னு தனியா எடுத்து வச்சிருப்பாங்க. வேறு சில பேரு, இந்த மதிரி சேர்த்து வச்சிருக்கிறவங்ககிட்டேயிருந்து விதை நெல்லை வெலை கொடுத்து வாங்குவாங்க. ஆனா நெலம் இருக்கிறவங்க யாரும், 'எங்கிட்ட விதை நெல்லு இல்லே. அதனால என்னால நெல் விதைக்க முடியாது. ஆனா எனக்கு நெறைய நெல்லு அறுவடை செய்யணும்'னு சொல்ல மாட்டாங்க.

ஆனா, நீங்க நெறைய பணம் சம்பாதிக்கணும்னா, முதல்ல விதை நெல்லு மாதிரி கொஞ்சம் பணம் வேணும்னு சொன்னா, நெறையபேரு 'எங்கிட்ட பணம் இல்லியே! நான் எப்படிப் பணம் சம்பாதிக்கறது?'ன்னு ரொம்ப புத்திசாலித்தனமா கேப்பாங்க!

பணம் இல்லேன்னா பணம் சம்பாதிங்க! நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு தெரியுது. இப்பத்தானே சொன்னீங்க, 'பணம் இருந்தாத்தான் பணம் சம்பாதிக்க முடியும்னு? எங்கிட்டதான் பணம் இல்லையே! நான் எப்படிப் பணம் சம்பாதிக்கறது?'

இதுக்கான பதில் ரொம்ப சிம்பிள். விதை நெல்லு இல்லாதவங்க அதை விலை குடுத்து வாங்கற மாதிரி, ஆரம்பத்தில நீங்களும் கொஞ்சம் பணத்தை வெலை குடுத்து வாங்கணும்!

பணத்தை எப்படி வெலை குடுத்து வாங்கறதுங்கறிங்களா? இங்கே நான் வெலைனு சொன்னது நீங்க செய்ய வேண்டிய ஒரு சின்ன தியாகத்தை. இந்தச் சின்னத் தியாகம் உங்களோட ஒழைப்பா இருக்கலாம். ஏதாவது வேலை செஞ்சு நீங்க கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம். அல்லது உங்களோட தேவைகள் எதையாவது குறைச்சுக்கிட்டு, பணத்தை மிச்ச்ப்படுத்தலாம். கொஞ்சம் யோசிச்சு என்ன தியாகம் செய்யப்போறிங்க என்பதைத் தீர்மானிச்சு வையுங்க.